கடந்த 2004இல் சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக ‘வீழ மாட்டோம்’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயி உள்ளிட்ட  ஏராளாமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிவடைந்த பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஓட்டலுக்கு தான் அழைக்கப்பட்டதாகவும், அதில் உள்நோக்கம் இருந்ததால் அங்கு செல்ல மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த சின்மயி, அதற்காக மிரட்டும் வகையில் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என்றார்.

இதையடுத்து, வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், அண்மைக்காலமாக தான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றுள் இதுவும் ஒன்று என வேதனை தெரிவித்தார். உண்மைக்குப் புறம்பான எதையும் பொருட்படுத்துவதில்லை எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டார்.

வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பாடகி சின்மயி, ‘வைரமுத்து பொய்யர்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சின்மயிக்கு ஜிப்ரான் உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் நாளுக்கு நாள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவரும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில்,“அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?

மேலும், பாடகி சின்மயி கருத்து கவனிக்கப்பட வேண்டியது, நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது” என சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.

 

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சின்மயிக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் “மீ டூ தொடர்பாக எம்.ஜே.அக்பர் பற்றி கால் பக்க கட்டுரை எழுதிய இமாம் அலிக்கு முழுபக்க விளம்பரம் தந்த பத்திரிகை சின்மயி புகார் பற்றி மௌம் ஏன்” என பதிவிட்டிருந்தார்.

பாடகி சின்மயிக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜனும் ஹெச்.ராஜாவும் ஆதரவு அளித்துள்ளனர்.