பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த பாடகி சின்மயி காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார்.

மீ டூ இயக்கத்தை தமிழகத்தில் பரவலாகக் கொண்டு சென்றதில் முக்கியமானவர் பாடகி சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு வைத்ததோடு பல பெண்களின் கதைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் இன்னமும் வைரமுத்து மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல் உள்ளார். இதனால் சின்மயி மீதான எதிர் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மீ டூ விற்குத் தனது படவாய்ப்புகளை இழந்துள்ளதாகக் கூறும் சின்மயி அவ்வப்போது நடக்கும் பெண்களுக்கு எதிரானக் கொடுமைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  அவருக்குக் கீழ் வேலை செய்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

அதற்காக ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ள சின்மயி, போராட்டத்துக்காக காவல்துறையிடம் அனுமதிக் கேட்டுள்ளார்.