மருத்துவ பயன்பாட்டுக்காக நமது சித்தர்கள் கஞ்சாவைப்
பயன்படுத்தியதாக சில பாடல்கள் உண்டு. அதனைப் பயன்படுத்துகின்ற அளவும், தரமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிது பிசகினாலும் மருத்துவத்துக்கான இந்த மூலிகை, போதைக்கான மூலப் பொருளாக மாறிவிடும் ஆபத்து உண்டு.

கஞ்சாவுக்கு உள்ள உலகளாவிய சந்தையும், அதன் வணிக
முக்கியத்துவம் கருதியும் தமிழகத்தில் கஞ்சா செடி வளர்வதற்கு ஏற்ற பருவநிலையுள்ள குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய சில இடங்களில், சட்டத்துக்குப் புறம்பாக சிலர் கஞ்சாவை பயிரிட்டு கல்லா
கட்டினர். இதன் ஆபத்தை உணர்ந்த அரசு துரித நடவடிக்கை
மேற்கொண்டு தற்போது பெருமளவு கஞ்சா பயிரிடலை ஒழித்திருக்கிறது.

தமிழகத்துக்கு வெளியேயுள்ள சில மாநிலங்களிலிருந்து அண்மைக்காலமாக வேறு வடிவத்தில் கஞ்சாப் பொருட்கள்
ஊடுருவத் தொடங்கியுள்ளன. அதுதான் சாக்லெட்.

பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட சில ‘மனித நேயமற்ற
உள்ளங்கள்’, இந்த சாக்லெட் விற்பனையை தங்களுக்கான
பொருளியல் வாய்ப்பாக மட்டுமன்றி, எதிர்காலத்
தலைமுறையினரின் நலனுக்கு ஊறு விளைவிப்பதில் ‘அதீத
கவனம்’ காட்டும் சில தேச விரோத சக்திகளுக்கும் இங்கே
காலூன்ற வாய்ப்பளித்துள்ளன.

கஞ்சா மத்திய ஆசியாவிலிருந்து, தெற்காசியா வரை பரவலாகக் காணப்படும் ஒரு பூக்கும் இனத்தைச் சேர்ந்த தாவரக் குடும்பமாகும். கேன்னபிஸ் சாட்டிவா, கேன்னபிஸ் இன்டிகா, கேன்னபிஸ் ருடராலிஸ் என மூவகை இனங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.

இதையும் படிங்க பாஸ்-  வாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் !

இந்தியாவில் இந்தத் தாவரம் வளர்வதற்கு ஏற்ற தட்பவெப்பநிலை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிறையவே உள்ளன. நார்ப்பொருள் மற்றும் எண்ணெய் வித்தாகவும் பயன்படும் கஞ்சாச் செடியில், போதைக்கான டெட்ராஹைட்ரோ கேன்னபினால் என்ற
வேதிப்பொருள் சற்று அதிகமாகவே உண்டு. இவற்றைப்
பிரித்தெடுத்தே சாக்லெட் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில்
போதைக்காகப் பயன்படுத்துகின்றனர்.

அதேபோன்ற போதை மூலப்பொருள் மல்லிகை உள்ளிட்ட சிலர்
மலர்களிலும் உண்டு. மிக நுண்ணிய அளவில் காணப்படும்
இதனையும் பிரித்தெடுத்து போதைக்குப் பயன்படுத்துகிறார்கள்.

கஞ்சா தரும் போதைக்காக உலகம் முழுவதும் 4 – 10 சதவீதம்
பேர் அடிமைப்பட்டுள்ளனர் அல்லது தினமும் ஏதோ ஒரு
வகையில் இதனைப் பயன்படுத்தி மகிழ்கின்றனர்.

சாக்லெட் மூலம் குழந்தைகளை நிரந்தர போதை அடிமையாக்கும் முயற்சியின், ஆரம்ப நிலை சூழ்ச்சியே தற்போது தமிழகம் முழுவதும் கிலோ கணக்கில் பிடிபட்டு வரும் கஞ்சா சாக்லெட்.

‘பிகார், மேற்குவங்கம் மற்றும் சில பின் தங்கிய மாநிலங்களில் இதே போன்ற சாக்லெட் விற்பனை மூலம் அங்குள்ள குழந்தைகளைக் குறி வைத்த கும்பலே, தற்போது தமிழகத்திலும் தங்களது வலையை விரித்திருக்கக்கூடும்.

இதையும் படிங்க பாஸ்-  பாகுபலி-2 டிரெய்லர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

இது போன்ற சாக்லெட்களைச் சுற்றியுள்ள காகிதத்தைப் பிரித்த
மாத்திரத்தில் உள்ளிருந்து கஞ்சா வாடை நமது மூக்கைத்
துளைக்கும். நாம் அறியாத வண்ணம் திப்பிலி, மிளகு, திரிபலா
ஆகிய மூலிகைகளோடு பேரீச்சம்பழத்தையும் சேர்த்து குழந்தைகள் உணராத வண்ணம் கஞ்சாவையும் கலந்து விடுகின்றனர்.

இதை உண்ணக்கூடிய குழந்தைகள் தங்களை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக இதன் சுவைக்கும், தருகின்ற போதைக்கும் அடிமையாகி, நாளுக்கு நாள் தாங்கள் உண்ணுகின்ற அளவை அதிகரித்துக் கொண்டே செல்வர்’ என்கிறார் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு
போலீசிலுள்ள அந்த மூத்த அதிகாரி.

தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள உணவுப்பொருள் கலப்பட  தடுப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வடஇந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் பாரம்பரியமாகவே கஞ்சா கலந்த உணவுப் பதார்த்தங்களை, சாக்லெட்டுகளைப் பயன்படுத்துவது அம்மக்களின் வழக்கம். இதனை ‘பாங்கு’ என்றழைக்கின்றனர். கோவில் விழாக்களில், வீட்டு விசேஷங்களில் தவறாமல் இவை இடம் பெறுவதுண்டு.

ஆனால் அவ்வழக்கத்தை தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
நுழைத்து, கஞ்சாவுக்கான சந்தை வாய்ப்பை விரிவுபடுத்துவது
இந்தச் சமூக விரோதக் கும்பலின் நோக்கமாக இருக்கலாம்’
என்கிறார் சந்தேகத்தோடு.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்த பிரபல ஹீரோ!!

மெக்சிகோ, நெதர்லாந்து, கனடா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா,
ரஷ்யா, ஈரான், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும்
கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், சட்டத்தை மீறி அங்கு கஞ்சா பயிரிடல் அமோகமாக
நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும்
ஓராண்டுக்கு ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான
கஞ்சா வர்த்தகம் நடைபெறுகிறது. கஞ்சாச்செடியை
மூலிகையாக அங்கீகரிப்பது தொடர்பாக அமெரிக்காவில்
பல்வேறு தளங்களிலும் கருத்து மோதல்கள் நடைபெற்று
வந்தாலும், அமெரிக்க மருந்துப் பொருட்கள் அமலாக்க முகமை
கஞ்சாவை மூலிகைப் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதைத்
திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கஞ்சா எனும் ‘வஸ்து’, மூலிகையா, போதைப் பொருளா என்ற
விவாதங்களுக்கே இடமின்றி, போதையை மையப்படுத்திய
அதன் வணிக உத்தியை கடுமையான சட்ட விதிகளின் மூலம்
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்,
இந்தியா முழுவதும் விரிந்துள்ள இச்சூழ்ச்சி வலையை, சில
நாட்களில் அறுத்தெரிய முடியும். குடி போதையால் அழிந்து
கொண்டிருக்கும் தலைமுறை ஒரு பக்கமென்றால், கஞ்சா
சாக்லெட் என்ற சூழ்ச்சி மூலம் நம் எதிர்காலத் தலைமுறையும்
பாழாக ஒரு போதும் அனுமதிக்க முடியாது.