மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன் – சினிமா ஊழியர் மிரட்டல்

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என தமிழ் சினிமா துறையில் லைட்மேனாக பணி புரியும் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான படம் குரு. இப்படத்தில் அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் மணிமாறன் என்பவர் லைட்மேனாக பணிபுரிந்தார். அந்த படத்தில் அவர் பணியாற்றிய போது அவருக்கு ரத்தம் தொடர்பான தொற்று நோய் ஏற்பட்டது. ஆனால், அதற்கான சிகிச்சை பெற போதிய பணம் இல்லாமல் அவர் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. எனவே, தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கத்திற்கு அவர் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஆனால், அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை எனத் தெரிகிறது. எனவே, அவர் நீதிமன்றத்தை நாடினார். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனாலும், லைட்மேன் சங்கம் எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை.

எனவே, தனக்கு மணிரத்னம் நிதியுதவி அளிக்க வேண்டும், இல்லையேல் அவரின் வீட்டின் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.