ஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு சரிப்பட்டு வராத அமைச்சர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு அதிரடி காட்டுவார். இதனை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய உள்ளதாக பேசப்படுகிறது.

தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்படுகிறது. உளவுத்துறை மூலமாக அமைச்சர்களின் பல நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு ஒரு டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் எடப்பாடியின் கையில் உள்ளதாம். அதன் அடிப்படையில் ஆறு அமைச்சர்களை களையெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது.

இது தொடர்பான தகவலை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியுடன் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இதுபற்றி யாருக்கும் தெரியவேண்டாம், ரகசியமாக இருக்கட்டும். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் களையெடுக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஷயம் எப்படியோ வெளியில் கசிந்து அந்த ஆறு அமைச்சர்களும் கிலியில் உள்ளார்களாம்.

அமைச்சர்கள், நிலோஃபர் கபில், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, எம்சி சம்பத் போன்றோர்கள் தான் அந்த ஹிட் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை சிபாரிசுக்கு சென்று பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.