மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 10, 1960-ஆம் ஆண்டு பிறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. பள்ளிக்கு செல்லாத வடிவேலு சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்கைள அரங்கேற்றி, அதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

தந்தை இறப்பிற்கு பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது வலுவேலுக்கு, நடிகர் ராஜ்கிரண் அறிமுகம் கிடைக்கவே, அதன் அடிப்படையில் சென்னைக்கு சென்று அவரின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

நம்ம வைகைப்புயல் வடிவேலு சென்னைக்கு செல்லும்போது, கையில் பணம் இல்லாமல், லாரியில் சென்றார். ஒன்று திரையில் நடித்து பெரியாளாய் வருவது இல்லை அங்கேயே மடிவது என்ற முடிவெடுத்துதான் சென்னைக்கு சென்றாராம்.

பின்பு,1991-ஆம் ஆண்டு கஸ்துாரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்து, தயாரித்து வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முறையாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அப்படத்திலேயே, வடிவேலு ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு’ என்ற ஒரு பாடலையும் பாடி தமிழ் சினிமாவில் தனது திறமையை நிரூபித்தார்.

பின்பு 1992-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சின்னகவுண்டர்’ படத்திலும், அதனைத் தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’,இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் சின்னகவுண்டர் திரைப்படத்தில், கவுண்டமணி சோகத்தில் அமர்ந்திருக்கும்போது, அவரிடம் வடிவேலும் செந்திலும், ‘அண்ணே நீங்க விட்டுச் சென்ற பணி இனி நாங்கள் செய்யப்போறோம்’ என்று பேசும் நகைச்சுவை அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.

அந்த காலகட்டத்தில் நகைச்சுவை இரட்டையர்களாக இருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் அடுத்து மூன்றாவது நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வந்தார்.

தொடக்கத்தில் இவர் ஏற்று நடித்த ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இவர் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிக் கொடி கட்டு’, அதனைத் தொடர்ந்து 2001-இல் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்‘ ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் வடிவேலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய மாற்றமாகவே அமைந்தது. அப்படத்தில் ‘கைப்புள்ள’ என்ற வேடத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தின் தலைவராக இருந்து அவர் நடித்த காட்சிகள் பெரியவர் முதல் சிறியவர் என அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார். இப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

அப்படத்தில் அவர் பேசிய ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’
ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையே’

‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’

‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’

‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’

ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு’

‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ என ஒவ்வொரு நகைச்சுவை காட்சியிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடித்த படத்தில் ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘இது தெரியாம போச்சே’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, க க க போ’,‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’ என உள்ளிட்ட பல நகைச்சுவைகளால் மக்களிடையே தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தவர்.

தற்போது, இணையதளவாசிகளின் காட்பாதர் என்றே இவரை அழைக்கலாம். இவர் வசனங்களோ அல்லது இவர் தொடர்பான மீம்ஸ்களோ இல்லாமல் நம்மால் ஒருநாளை எளிதில் கடந்து விட முடியாது. அந்தளவுக்கு நம் வாழ்வோடு இவரது நகைச்சுவைகளும், கதாபாத்திரங்களும் பின்னிபிணைந்தவை.

உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் சர்வதேச அரசியல் தலைவர்கள் வரை வடிவேலுவின் வசனங்களை வைத்தோ, புகைப்படத்தை வைத்தோ மீம்ஸ் இல்லாத நாளே இல்லை என்று கூட சொல்லலாம்.

தமிழ்நாடு மாநில அரசு விருது

காலம் மாறிப்போச்சு-1996
வெற்றிக் கொடி கட்டு-2000
தவசி-2001
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி-2006
காத்தவராயன்-2008
ஆகிய திரைப்படத்தில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதினை பெற்றார்.

ஃபிலிம்பேர் விருது
சந்திரமுகி-2005

மேலும், ‘மருதமலை’, ‘ஆதவன்’ ஆகிய படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’ பெற்றுள்ளார்.

கதாநாயகராக அறிமுகம்

1991-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, 2006-ஆம் ஆண்டு இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி‘ படத்தின் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ மற்றும் ‘தெனாலிராமன்;’எலி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனையடுத்து, தற்போது மீண்டும் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ‘வைகைப் புயல்’ வடிவேலுக்கு எங்களது சினி ரிப்போர்ட்டர்ஸ் இணைய இதழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.