பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது இரு சமூகத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து கோவில் சொத்துகள் மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் தமிழிசை, சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டால் காவிப்படை காக்கிகளை அடக்கியாளும் சூழல் தமிழகத்தில் ஏற்படும். காக்கிகளுக்கு காவிப் படை தகுந்த பாடம் நடத்தும் என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  சோபியா பிரச்சினை இயக்குனர் ரஞ்சித்- இயக்குனர் ராஜு முருகன் கண்டனம்

இதனையடுத்து அவரது இந்த பேச்சு, சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் தமிழகத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குகின்ற விதமாகவும் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். எனவே தமிழிசை மீது இருவேறு சமூகங்களிடையே கலவரத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர் கோவை மாநகர தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்.