நடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி பேசிய பேச்சினை கொலை மிரட்டலாக கருதி, வழக்குப் பதிவு செய்ய ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர் சென்னத்தூர் விஓசி நகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் இந்த புகாரை ஓசூர் காவல்நிலையத்தில் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்து, மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி, துப்பாக்குச் சூட்டுக்கு பலியான 13 பேர்களை சமூக விரோதிகள் என மறைமுகமாக பேசும் வகையில் கொச்சைப்படுத்தியுள்ளார் ரஜினி.

மேலும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும், தியாகங்களையும், போராட்டங்களையும், அவமதிக்கும் வகையில் பேசி போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம். போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு கொடுத்ததற்கான ரசீதையும் காவல்நிலையத்தில் பெற்றுள்ளார்.