தூத்துக்குடியில் நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டத்தின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. அப்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இன்னமும் பதற்றமாகவே உள்ள தூத்துக்குடியில் மக்கள் பதற்றத்தை அதிகரிப்பது போல காவல்துறையினர் சட்டவிரோதமான முறையில் போராட்டக்காரர்கள் என்று கூறி நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து பலரையும் கைது செய்து வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர்களையும், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களையும் கைது செய்கின்றனர்.

கைது செய்யாமல் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். இதுவரை அவர்களில் சிலர் திரும்பி வராததால் தூத்துக்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.