நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்ப இடைக்காலத் தடைவிதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

குடும்பம் மற்றும் தனி நபர் பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்த்து வைக்கும் களமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்ச்சியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.

பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளன. மேலும் பல நடிகைகள் கூட இதற்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர். பல எதிர்ப்புகளையும் மீறி இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாகப்பன் என்ற நபர் கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து கல்யாண சுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் இந்த நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுகிறது. இதனால் நாகப்பன் என்ற நபர் 2016-இல் தற்கொலை செய்துகொண்டதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே விதிமுறைகளை மீறிச் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்தது. மேலும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், விருதுநகர் ஆட்சியர், தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர், நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.