உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் மீனாட்சி தபா(27). சில இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் குமார்(36) மற்றும் அவரது காதலி பிரீத்தி சுரின்(26) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அவர்களிடம் தான் பெரிய பணக்காரி என்றும் பொழுதுபோக்கிற்காகவே சினிமாவில் நடிக்கிறென் என்றும் கூறியுள்ளார் மீனாட்சி.

 

 

இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மற்றொரு சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மீனாட்சி தபாவை அமீத்கரன் மற்றும் பிரீத்தி இருவரும் அலகாபாத்துக்கு கடத்திச்சென்றனர். பின்னர் மீனாட்சியின் பெற்றோரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவரது பெற்றோர் வெறும் ரூ.60 ஆயிரத்தை மட்டும் கடத்தல்காரர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த கடத்தல்காரர்கள் நடிகையை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகள் அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வித்து தீர்ப்பளித்தனர்.