பிரபல தமிழ் முன்னணி நடிகர் சிம்புக்கு எதிராக பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளனர். அதற்கு முன் பணமாக 50 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார் சிம்பு. ஆனால் இன்று வரை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. கால்ஷீட் கொடுக்காமல் சிம்பு இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனையடுத்து சிம்புவால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதால் அவருக்கு கொடுத்த முன் பணத்தை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சிம்பு அரசன் படத்தில் நடிக்க வாங்கிய முன் பணம் ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சமாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை நான்கு வாரத்தில் அவர் செலுத்தாவிட்டால், அவரது வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் மற்றும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் உள்ளிட்டவைகளை ஜப்தி செய்யலாம் என நீதிபதி கூறியுள்ளார்.