Home அரசியல் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன்: ரஜினிகாந்த் முரண் பேச்சு!

நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன்: ரஜினிகாந்த் முரண் பேச்சு!

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கவில்லையென்றால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதி குறித்து நிறைய பேசினார். பின்னர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காமல் முரண்டு பிடித்தது குறித்து ஆளும் கட்சியை விமர்சித்தார்.

அப்போது, மேல்முறையீடு செய்யாமல் மெரினாவில் இடம் கொடுத்தீர்கள். மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பேன் என கூறினார். இது சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றார் ஆவேசமாக.

ரஜினியின் இந்த கருத்து அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினி நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என கூறியுள்ளது, அவரது முந்தைய பேச்சுக்கு முரணாக உள்ளதால் மீண்டும் அவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார்.