நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்; துடிக்க துடிக்க கொன்றோம்: திகில் வாக்குமூலம்!

தன்னுடைய நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பலமுறை கண்டித்தோம். ஆனால் அவர் கேட்காததால் கொலை செய்து கொடைக்கானல் மலையிலிருந்து தூக்கி வீசினோம் என ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. டீக்கடையில் வேலை பார்க்கும் இவரை கடந்த 23-ஆம் தேதி காணவில்லை. இதனால் இவரை பல இடங்களில் தேடிய இவரது தாய் இறுதியாக காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தார். இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

இதனையடுத்து சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சீனிவாசன் மணிகண்டனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு திகில் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னுடைய நண்பர் சரவணன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

சரவணனுடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை பலமுறை கண்டித்தும் இவர்களுடைய கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனையடுத்து சரவணன் என்னிடம் இதனை கூறி வருத்தப்பட்டார். மணிகண்டனை கொலை செய்ய என்னுடைய உதவியை கேட்டார். இதனையடுத்து நான் என்னுடைய இரண்டு நண்பர்களின் உதவியுடன் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

கொடைக்கானலுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம் என மணிகண்டனை அழைத்தோம். இதனையடுத்து நாங்கள் நான்கு பேரும் கொடைக்கானலுக்கு சென்று நன்றாக மது அருந்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் சென்று மணிகண்டனின் வாயை பொத்தி கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்தோம். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க 1500 அடி பள்ளத்துக்குள் உடலை வீசினோம் என சீனிவாசன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் சீனிவாசனை கொடைக்கானலுக்கு அழைத்து சென்று மணிகண்டனின் உடலை வீசிய இடத்தை அடையாளம் கண்டு அவரது உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.