நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து காதலர் தினமான இன்று வெளியான படம் தேவ். ‘பையா’ படம் போல் இப்படம் பயணத்தை மையாக கொண்ட காதல் கதை என கூறப்பட்டதால் கார்த்திக் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.

மேலும், இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தியதால் ஏராளமான சாகச காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகி வரும் விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் கார்த்தி ரசிகர்களையே கவரவில்லை எனத்தெரிகிறது.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் பலரும் தேவ் படம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வருகின்றனர். படத்தின் விஸ்யுவல் எபெக்ட் நன்றாக இருப்பதாக பலரும் கூறினாலும், தேவை இல்லாத இடத்தில் வரும் பாடல் காட்சிகள், மெதுவாக நகரும் திரைக்கதை, படுமோசமான 2ம் பகுதி ஆகியவை பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பலரும் டிவிட் செய்து வருகின்றனர். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

அதேசமயம் காதலர் தினத்துக்கு இப்படம் சிறப்பான விருந்து. அருமையான காதல் கதை. இப்படம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது எனவும் சிலர் டிவிட் செய்துள்ளனர்.