விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய ‘சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷூம், இன்னொரு முக்கிய கேரக்டரில் த்ரிஷாவும் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜே இரண்டாவது பாகத்துக்கும் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹரி இயக்கிய ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களுக்கும் விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்திற்கும் இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் முதல்முறையாக ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபுதமின்ஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ஹரியின் ‘சாமி 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.