பொதுமேடையில் தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தர்

கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘விழித்திரு’. இப்படத்தை இயக்குனர் மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் வந்திருந்தார். டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் தன்ஷிகா பேசும்போது எல்லோரையும் பற்றி பேசிவிட்டு டி.ஆரை பற்றி பேச மறந்துவிட்டார். இதை அந்த மேடையிலேயே தன்ஷிகாவிடம் டி.ஆர் கேட்டுவிட்டார். அவர் சொல்லும்போது, சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால், இந்த டி.ஆர் யாரென்று தன்ஷிகா கேட்டுக் கொண்டிருக்கிறது. நீயெல்லாம் என் பெயரைச் சொல்லியா நான் வாழப் போகிறேன்? ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவை பற்றியா கவலைப்படப் போகிறேன் என தனது நடையில் பேச ஆரம்பித்தார்.

உடனே, தன்ஷிகா எழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு அவரது காலில் விழ, அப்படியும் டி.ராஜேந்தர் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து தனக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, சபை நாகரீகம் தெரிந்து பேசவேண்டும் என்று தன்ஷிகாவுக்கு அறிவுரை வழங்கினார். தன்ஷிகா கடைசியில் தன் தவறை உணர்ந்து உணர்ச்சி மிகுதியில் அழுதே விட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.