பாடகரின் படத்தில் பாடிய தனுஷ்

தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். ‘மாரி’ படத்தில் இவருடைய வில்லத்தனமான கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் வில்லனாகத்தான் வலம்வருவார் என எதிர்பார்த்தால் ‘படைவீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா என்பவர் இப்படத்தை இயக்குகிறார். அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, மனோஜ்குமார், கவிதா பாரதி, கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை தனுஷுக்காக பிரத்யேமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த தனுஷ் படத்தை பாராட்டியதுடன், அதில் தன்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று ஒரு பாடல் ஒன்றை பாடிக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார். உடனடியாக, அந்த பாடலுக்கு கவிஞர் பிரியன் வரிகளை எழுத, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா டியூன் அமைக்க, ‘லோக்கல் சரக்கா பாரின் சரக்கா’ என்ற படு துள்ளலான பாடலை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது. இப்படத்தை எவோக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.