ரஜினிக்கு மிரட்டல் விடுத்த ஹாஜி மஸ்தான் மகனுக்கு தனுஷ் அதிரடி பதில்

10:09 காலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் மும்பை டான் ஹாஜி மஸ்தானின் கதை என்று வதந்தி கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் தனது தந்தை ஹாஜி மஸ்தானின் கதையை படமாக்க கூடாது என்று சமீபத்தில் அவருடைய வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்

ரஜினியின் போயஸ் தோட்ட முகவரிக்கு வந்திருந்த இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தற்போது ஹாஜி மஸ்தானின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனுஷ் கூறியிருப்பதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக திரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை” என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்’

இந்த விளக்க அறிக்கையை அடுத்து இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393