தர்மபுரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த 70 பேரைப் போலிஸ் புதிதாகக் கட்டியுள்ள நீதிமன்ற வளாகத்துக்கு இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

இருசக்கரவாகனங்களில் பயணம் செய்யும்போது ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் கடுமையாகப் போராடி வருகிறது.

அதன் ஒருக் கட்டமாக தர்மபுரி மாவட்டக் காவல்துறையினர் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் விதமாக நேற்று ஒரு விஷேச சுற்றுலா நிகழ்ச்சியை நடத்தினர். அதன் படி ஹெல்மெட் அணியாமல் வந்த 70 பேரைப் பிடித்து அவர்களிடம் எந்த அபராதமும் விதிக்காமல் அவர்களைப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வந்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் நீதிமன்றத்துக்கு வந்துதான் அதை மீண்டும் பெறமுடியும், அதனால் ஆகும் நேரவிரயம் மற்றும் காலவிரயம் ஆகியவைப் பற்றி விளக்கியுள்ளனர். இதையடுத்து அனைவரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து இனிக் கட்டாயம் ஹெல்மெட் அணிவதாக உறுதியளித்துள்ளனர்.