தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாகவும், அவர்கள் தமிழக மலைகளை பயிற்சி களமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சட்டியிருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதற்கு தமிழக அமைச்சர்கள் யாரும் பதிலளிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்நிலையில் இதற்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 20-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள், தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளை பயிற்சிக் களமாக அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். கூடிய விரைவில் தமிழகம் கலவர பூமியாக மாறும். நக்சலைட்டுகள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தங்களுடைய தீவிரவாத ஆட்சியை நிலைநிறுத்தப் போகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நேற்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், இதற்கு பதில் சொல்லாமல் இருக்கும் தமிழக ஆட்சியாளர்களை கிண்டலடித்தார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுதானே இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை தாங்கிப் பிடித்துள்ளது. மத்திய அரசிடம்தான் ரா உளவுப் பிரிவு உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று கூறும் மத்திய அமைச்சர் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்றார்.

மேலும், மத்திய அரசுதானே ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மத்திய அரசிடம் பேசி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாமே என்றார் அதிரடியாக.