துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது பேச்சை அவரது மனைவியே நம்பமாட்டார் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முகம் சுளிக்க வைத்துள்ளது.

டிடிவி தினகரனுக்கும் அதிமுகவினருக்கும் இடையேயான வார்த்தைப்போர் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தினகரன் முதல்வராக முயற்சி செய்ததாக நேற்று முன்தினம் திருவாரூரில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

இதனையடுத்து நேற்று இதற்கு பதிலளிக்கும் விதமாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காது என்ற விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஓபிஎஸ் பேசி வருகிறார். பதவி வெறியில் தவறான தகவல்களைக் கூறிவரும் பன்னீர்செல்வத்தின் பேச்சை அவரது மனைவியே நம்ப மாட்டார். நேற்று நடைபெற்றது காவிரி உரிமையை மீட்டெடுத்ததற்கான வெற்றி விழா அல்ல, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய கோமாளித்தனமான கூத்து தான் என மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தார்.