ஸ்டெர்லை போராட்டத்தின் போது ரஜினி தெரிவித்த கருத்தையும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என ரஜினி கூறியதையும் கிண்டல் செய்யும் விதமாக அவரை சீண்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காமல் முரண்டு பிடித்தது குறித்து ஆளும் கட்சியை விமர்சித்தார்.

அப்போது, மேல்முறையீடு செய்யாமல் மெரினாவில் இடம் கொடுத்தீர்கள். மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பேன் என கூறினார். இது சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றார் ஆவேசமாக.

ரஜினியின் இந்த கருத்து அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினி நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என கூறியுள்ளது, அவரது முந்தைய பேச்சுக்கு முரணாக உள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் பேசிய தினகரன், கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்காவிட்டால் நானே இறங்கி போராடி இருப்பேன் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் போராட்டம் கூடாது என்றார். அவர் பேசியதை அவருக்கே அன்றும், இன்றும் என தொலைக்காட்சிகள் போட்டு காண்பிக்க வேண்டும் என்றார்.