முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அதன் ஒருபகுதியாக தினகரன் நடத்திய வீதி நாடகம் எடப்பாடி பழனிசாமியை ரொம்பவே டென்சன் ஆக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையை முடிக்குவிட்டுள்ள தினகரன் எடப்பாடியில் மட்டும் தனியாக கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார். இந்த பொறுப்பை தாம்பரம் நாராயணனிடம் தினகரன் ஒப்படைத்துள்ளார். அவரும் கடந்த சில வாரங்களாக தனது டீமுடன் எடப்பாடியில் தங்கியிருந்து காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார்.

இந்த டீம் தினமும் எடப்பாடியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வீதி நாடகம் போடுகின்றனர். அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் சென்று அவருக்கு எதிராக வீதி நாடகம் போட்டு கூட்டத்தை கூட்டி இறுதியில் உறுப்பினர் படிவத்தை கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கின்றனர்.

இந்த வீதி நாடகத்தில் மோடி காலில் எடப்பாடியும், பன்னீரும் விழுந்து கிடப்பது போல முக்கியமான மூன்று கதாப்பாத்திரத்தை வைத்துள்ளார்கள். 8 வழி சாலைக்காக எடப்பாடி போடும் கரணங்கள், இதில் அவருக்கு குவியப்போகும் கோடிகள் என பல விஷயங்களை இந்த நாடகத்தில் சொல்கின்றனர். மோடி சொல்வதை மீறி எடப்பாடியும் பன்னீரும் எதுவுமே செய்ய மாட்டார்கள். அவர்களை நம்பி இருந்தால் உங்களை நடுத்தெருவில்தான் நிற்க வைப்பார்கள் என்று நாடகத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இதனால் உறுப்பினர் சேர்க்கையும் ஜோராக அங்கு நடந்து வருகிறது.

இது எடப்பாடியின் காதுக்கும் சென்றிருக்கிறது. இதனையடுத்து இந்த வீதி நாடகத்துக்கு அனுமதியளித்த காவல்துறையை அவர் ஒரு பிடி பிடித்ததாக பேசப்படுகிறது. தினகரனின் இந்த அமர்க்களமான செயல்பாடுகளால் அதிமுகவினர் பலரும் அவர் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர். எடப்பாடியின் சொந்த ஊரிலேயே அவரின் செல்வாக்கை காலி செய்ய தினகரன் எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.