ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரனைப்பற்றி சட்டசபையில் பேசியதில் இருந்து தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாக நேரடியாக தினகரன் மீது அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அமைச்சர் பொய்கூறுவதாக தினகரன் அதனை மறுத்துள்ளார்.

நேற்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தினகரனை விமர்சித்து சில குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் இதற்கு பதிலளிக்க தினகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் இன்று அவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், அமைச்சரை போனில் மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தினகரன், நான் அவரை போன் போட்டு மிரட்டினேனா? அவர் பொய்யாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இவரேகூட ஆள்வைத்து மிரட்ட வைத்திருக்கலாம். காவல் துறையை அவர்கள்தானே வைத்திருக்கிறார்கள். மிரட்டியவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாமே என கூறினார்.