ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் நடிக்க மறுத்தேன்: திண்டுக்கல் லியோனி

சினிமாவை பற்றி கேலி செய்து பேசி ஆடியோ வெளியிட்டே பிரபலமான திண்டுக்கல் லியோனி, அதன் பின்னர் ‘கங்கா கெளரி’ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் அதன்பின்னர் பட்டிமன்ற நடுவராகிவிட்டார்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புத்தக விழாவில் கலந்து கொண்டு பேசிய லியோனி, ‘, ‘நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’. இதில் அருண் விஜய், வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் பட்டிமன்றம் ராஜா நடித்த கதாபாத்திரத்தில் என்னைத்தான் நடிக்க வைக்க அணுகினார்கள். நான் தான் மறுத்து விட்டேன்.

தற்போது, வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுபோல், இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்