அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை காவல்துறையினர் குறிவைத்து கைது செய்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது இயக்குநர் கவுதமனை கைது செய்துள்ளனர்.

நேற்று இயக்குநர் கவுதமன் சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர் அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர். பின்னர் அவரை ஜூலை 6 வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது கவுதமன் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் தான் நேற்று அவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் போராடிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர்கள், பியூஸ் மனூஷ், வளர்மதி ஆகியோரும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.