சமீபத்தில் வெளியான பாம்பு சட்டை படத்தில் இடம் பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் பாராட்டி பேசியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆடம்தாசன் இயக்கி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பாம்பு சட்டை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படத்தின் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது தந்தையாக நடித்துள்ள சார்லி ஆகியோரின் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டப்படுகிறது.

இதுபற்றி இப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்த போது, என் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்ய ஒரு இளம்பெண் வருவார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். அவருக்கு ஒரு காதல் இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்த போது உருவான கதைதான் இந்த பாம்புசட்டை. படம் பார்த்த அனைவரும் கீர்த்திசுரேஷின் கதாபாத்திரம் பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், இந்த படம் பார்த்த பா.ரஞ்சித், ஆடம் தாசனை நேரில் வரவழைத்து, கீர்த்தி சுரேஷ் மற்றும் சார்லி ஆகியோரின் கதாபாத்திரம் பற்றி சிலாகித்து பேசினாராம். எளிய மக்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் போது, அது படைப்பாளனின் தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல. ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி என ரஞ்சித் பாராட்டி பேசினாராம்.