தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல், டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாய நிலங்கள் பெரிதும் சேதமாகியுள்ளன.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், மின்கம்பங்கள் பெருமளவில் சேதமடைந்ததால், அதை சீர்செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், நிவாரண உதவிகள் அளித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித் சமீபத்தில் ரூ.15இலட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் என்று செய்திகள் வெளியான.

இந்நிலையில், அடுத்த ஆண்டு 2019 பொங்கலுக்கு அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எப்படி எல்லாம் சிறப்பிக்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிச.2) சேலத்தில் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் விநியோகஸ்தர் 7ஜி சிவா கலந்து கொண்டார்.

அஜித்தின் தீவிர ரசிகரான இவர், ‘வீரம்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் வைத்து ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் படத்தை ரீமேக் செய்ததோடு, அப்படத்திற்கான தமிழக உரிமையை வாங்கியவர். தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ படத்தின் சேலம் உரிமையை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று சேலத்தில் நடந்த (டிசம்பர் 2) ஆலோசனைக் கூட்டத்தில் இவர் பேசியபோது, “அஜித் சார் கஜா புயலுக்கு நிவாரண நிதியாக ரூ.15இலட்சம் கொடுத்தார் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால், அஜித் சார் ரூ.5கோடி கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாக பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்கு பெர்சனலாக தெரியும். எதையுமே அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த விடியோ சமுக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், அஜித் கஜா புயல் நிவாரண நிதிக்கு கொடுத்தது 15இலட்சமா அல்லது 5 கோடியா என பலர் ஆராய்ந்து வருகின்றனர்.