தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றப் பிரார்த்திக்கிறேன் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி விஜயகாந்துக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. நீண்ட நேரம் ஒழுங்காக பேச முடியவில்லை. பேசினாலும் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாத அளவுக்கு உள்ளது. இந்த அளவுக்கு அவரது உடல் நிலை மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்ற விஜயகாந்த் 45 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பினார். ஆனாலும் அவரது உடல் நிலை பார்ப்பதற்கு மோசமாகத்தான் உள்ளது. இதனால் மீண்டும் விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்வார் என பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர். அதன் பின்னர் தான் பாஜக தலைவர் தமிழிசை விஜயகாந்த் குணமடைய பிராத்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என கூறியுள்ள தேமுதிக தரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.