திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார். ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் வைத்து முழு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டார்.

95 வயதான கருணாநிதி 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். 50 ஆண்டுகால திமுக தலைவர், 19 ஆண்டுகள் தமிழக முதல்வர் என தனது வாழ்க்கை முழுவதும் ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் அடக்கம் செய்யப்பட உள்ள சவப்பெட்டியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு அவருக்கு புகழ் சேர்த்துள்ளனர். இவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமும் கூட.

ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த மூவண்ணக்கொடியை அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சந்தனப்பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு மீண்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலியின் போது அவரது வாரிசுகள் அழுகையை அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர். குறிப்பாக மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி ஆகியோர் அழுத காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு காண்போர் மனதையே கலங்க வைத்தது.

இறுதியாக 21 ராணுவ குண்டுகள் முழங்க ஓய்வில்லாத சூரியனுக்கு ஓய்வை அளித்தனர். மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி ஆகியோர் தொடர்ந்து தேம்பி தேம்பி அழுதவாறே உள்ளனர். இருந்தாலும் திரும்பி வர இயலாத தூரத்திற்கு சென்றுவிட்டார் கலைஞர் கருணாநிதி. உடன்பிறப்பே விடைபெறுகிறேன். இனிமேல் அந்த கரகர குரலில் உடன்பிறப்பே என கேட்கமுடியாது என்பதே உண்மை.