திமுக செயற்குழுக் கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். இன்று காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது தான் இந்த கூட்டத்தின் நோக்கம்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது தான் நோக்கம் என குறிப்பிட்டிருந்தாலும், அடுத்த தலைவர் மற்றும் பொருளாளர் பற்றிய கருத்துக்கள் இந்த கூட்டத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பொதுவாக திமுக செயற்குழுக் கூட்டம் என்றால் மாவட்டத்துக்கு இருவர் வீதம் 65 மாவட்டத்துக்கு 130 பேர் என தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சில நூறு பேர் தான் அழைக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த முறை இவர்கள் அனைவரையும் தாண்டி, மாவட்ட துணைச் செயலாளர்கள், கட்சியின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் என்று சுமார் ஆயிரம் பேரைத் தாண்டும் அளவுக்கு இன்றைய செயற்குழுவில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட பொதுக்குழு போலவே காட்சியளிக்கும் செயற்குழுக் கூட்டமாக இருக்கும்.

இத்தனை பேர் அழைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் இன்றைய கூட்டத்தில் அடுத்த தலைவருக்கான முன்மொழிதல் இருக்கும் என உடன்பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய கூட்டமே செயல்தலைவர் தலைமையில் என பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.