நடிகர் அஜித் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. இதற்கு திமுக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் இயக்குநர் சிவா கூட்டணியில் தொடர்ந்து நான்காவது படமாக விஸ்வாசம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமைய்யா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி வெளியானது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் ஹேஷ்டேக் உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி உள்ளனர். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் குறித்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவும், திரைப்பட தயாரிப்பாளர் & விநியோகிப்பாளருமான ஜெ.அன்பழகன், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து. விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக அழகாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. அஜித்துக்கும், விஸ்வாசம் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.