வரும் 28-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடவுள்ளது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆன பின்னர் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். பின்னர் திமுக செயற்குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், விரைவில் தலைவராக உள்ள செயல் தலைவர் ஸ்டாலின் என குறிப்பிட்டு பேசினார். மேலும் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என பல நிர்வாகிகள் பேசினர்.

திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என பல மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்ட தேதியை அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் தொடர்பாகவும், தணிக்கை குழு அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. மேலும் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆன பின்னர் அகில இந்திய தலைவர்களை வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.