பொதுவாக ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இறந்துவிட்டால், அந்த கட்சியை கைப்பற்ற சிலர் முயற்சிப்பார்கள். இதனால் அந்த அரசியல் கட்சியில் பிளவு ஏற்படவே அதிகமான வாய்ப்புகள் உண்டு. இதனை காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அனைத்துக் காட்சிகளையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியும் இறந்துவிட்டார். இதனால் திமுகவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுகவினர் உள்ளனர்.

திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினுக்கே அதிகமான வாய்ப்புகள் இருந்தாலும், அவருக்கு இருக்கும் ஒரே தடை மு.க.அழகிரி தான். மு.க.அழகிரி திமுக தலைவர் பதவிக்கு நெருக்கடி கொடுப்பதால் அந்த கட்சியில் ஏதாவது பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவுதான்.

இந்நிலையில் திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு அடித்துக் கூறுகிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும். அழகிரியின் 40 ஆண்டுகள் அரசியல் பணியைப் பற்றி மதுரையில் உள்ள எனக்கு தெரியும். அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் என தெரிவித்தார்.