திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வலியுறுத்தி வரும் மு.க.அழகிரி தான் இல்லையென்றால் வர உள்ள இடைத்தேர்தலில் திமுக தோற்று நான்காம் இடத்துக்கு தள்ளப்படும் என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தன்னை திமுகவில் சேர்த்துக்கொள்ளுமாறு மு.க.அழகிரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக கடந்த 5-ஆம் தேதி சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணியாக சென்று கலைஞர் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி கவனத்தை ஈர்த்தார்.

மேலும் தன் பின்னர் 1.50 லட்சம் பேர் உள்ளனர். முடிந்தால் இவர்கள் அனைவரையும் நீக்கி பாருங்கள் என சவால் விடுத்தார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் நான் இல்லாமல் திமுக வெற்றி பெறாது எனவும் திருப்பரங்குன்றத்தில் 4-வது இடத்துக்கு திமுக தள்ளப்படவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும் தன்னை திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்று தேர்தல் பணியாற்றத் தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.