தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பமான சில வாரங்களிலேயே பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிறது.

ஒருகட்டத்தில் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது பிடிக்காத காயத்ரி, சக்தி, ஜுலி, நமீதா ஆகியோர் அவரை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொந்தரவுகளை ஓவியாவுக்கு கொடுத்தனர். இருந்தாலும், ரசிகர்கள் ஓட்டுப்போட்டு ஓவியாவை உள்ளே வைத்துவிட்டு, அவருக்கு தொந்தரவு கொடுத்தவர்களை ஒன்றன்பின் ஒன்றாக வீட்டுக்கு அனுப்பினார்கள். இதில் ஆரவ் மட்டும் விதிவிலக்கு.

இவர்களில் ரசிகர்களின் பெறும் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரிதான். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் ரசிகர்கள் அவர்மீது வெறுப்பைத்தான் கொட்டி தீர்த்து வருகின்றனர். காயத்ரி வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவருடைய டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து ஏதாவது ஒன்றை பதிவு செய்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவுக்கும் பலர் கடுமையான கருத்துக்களை பதிலாக கொடுத்து வந்தனர். சிலர் வரம்புமீறி அசிங்கமாகவும் பதிவிட, காயத்ரி தன் கோபத்தை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் போட்ட பதிவில், என்னுடைய டுவிட்டால் எரிச்சல் அடைபவர்கள் என்னை பின்தொடர வேண்டாம். உங்களுக்கு பிடித்தமானவர்களையோ, உங்கள் ரோல் மாடலையோ பின்தொடருங்கள் என்று பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டுக்கும் ரசிகர்கள் பலரும் காயத்ரியை திட்டி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். எனவே, இந்த பதிவை தற்போது அவர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.