திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல் நலக்குறைவாக பாதிக்கப்பட்டிருந்த போது கட்சியை வழி நடத்த செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, தலைவருக்குரிய அனைத்து அதிகாரமும் அளிக்கப்பட்டு அந்த பதவியை மு.க.ஸ்டாலினுக்கு அளித்தனர். அப்போழுதே அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பது உறுதியானது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து திமுக தலைவர் பதவியை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் திமுகவினர் உள்ளனர். அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வரவே அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், மு.க.அழகிரி சில நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். இந்த சூழலில் திமுக செயற்குழு கூட்டம் இன்று கூடியது.

இந்த கூட்டத்தில் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பது குறித்த பேச்சுக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே செயற்குழுவில் பேசியவர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினின் தலைமையை ஆதரிக்கும் விதமாக பேசியுள்ளனர். குறிப்பாக இதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், விரைவில் தலைவராக உள்ள செயல் தலைவரே. இனி உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம், வழிநடத்து என ஓப்பனாக பேசினார். அவர் இப்படி கூறியதும் அரங்கம் முழுவதும் கரவொலி எதிரொலித்தது.