கோடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சி சம்பவத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஏப்ரல் மாதம் கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது, காவலாளி பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர், மர்மமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜும் விபத்தில் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் குறித்து, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சாமுவேல் மேத்யூஸ், புலனாய்வு மேற்கொண்டார், இந்த புலனாய்வு வீடியோவை, டெல்லியில் நேற்று அவர் வெளியிட்டார். அதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், புலனாய்வு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமது அமைச்சர்கள் தொடர்பான, ஆவணங்களை கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், இதனை பயன்படுத்தியே, அனைவரையும் அவர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் இந்த புலனாய்வு வீடியோ கூறுகிறது. அதேபோன்று, அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக கனகராஜ் 5 கோடி ரூபாய் பெற்றார் எனவும், ஆவணப்படத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோடநாடு சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள் மற்றும் அதற்கு பின்புலத்தில் இருந்தவர்கள் மீது சென்னை காவல் நிலையத்தில் நேற்றே புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா கட்சி நிர்வாகிகள் குறித்து எந்த ஆவணங்களையும் வாங்கியதில்லை. ஆனால் கோடநாட்டில் வைத்திருந்ததாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் துளியும் உண்மையில்லை.

ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறுக்கு வழியை கையாண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது. திமுக எதாவது ஒரு வழக்கு என் மீது போட்டுக்கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டதுக்கு திமுகவே காரணம்.  என் மீது தவறான வழக்கு போடுவதே திமுகவின் வேலையாக உள்ளது என்றார்.