18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு செல்ல உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த 18 எம்எல்ஏக்களுக்கும் போன் போட்டு பேசி தன் பக்கம் வருமாறு அழைத்ததாக அதிமுக வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடமும் பேசி அவர்களை தங்கள் பக்கம் இழுக்க சில நம்பிக்கைக்குறிய அமைச்சர்களை எடப்பாடி நியமித்தார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை எந்த பலனுமளிக்காத காரணத்தால் தற்போது எடப்படியே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சில எம்எல்ஏக்கள் எடப்பாடியுடன் பேசியதாகவும், சிலர் தவிர்த்ததாகவும் தகவல்கள் வருகிறது. எம்எல்ஏக்களுக்கு போன் போடும் எடப்பாடி, நான் தான் முதல்வர் பழனி பேசுறேன். நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அனைத்தும் சிறப்பாகச் செய்து தருகிறேன். இந்தப் பக்கம் வந்துடுங்க என பேசுவதாக கூறப்படுகிறது.

இத்தனை நாட்களாக 18 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்காத எடப்பாடி நேற்று திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கள் அணியில் இணைவதாகப் பத்திரிகையாளர்களான நீங்கள்தான் கூறுகின்றீர்கள். அவ்வாறு அவர்கள் இணைந்தால் பாராட்டுக்கு உரியதுதான் என்றார். இதனால் தினகரன் படு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.