தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களின் போது ஆறு முறை கைது செய்யப்பட்டிருப்பதாக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் 15-ஆம் நாளான நேற்று காவல்துறை மாணியக்கோரிக்கை குறித்த விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துக்கொண்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய பல கேள்விகளுக்கு முதல்வர் உரிய விளக்கத்தை பதிலாக அளித்தார்.

அப்போது திமுகவை சேர்ந்த உதயசூரியன் என்ற எம்எல்ஏ, இரவு நேரத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உங்களுடைய ஆட்சிக்காலத்தில், நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபொழுது எங்களையும் கைது செய்திருக்கிறீர்கள்.

நானே ஆறு முறை கைது செய்யப்பட்டிருக்கின்றேன், பல்வேறு போராட்டங்களின் வாயிலாக கைது செய்யப்பட்டிருக்கின்றோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உங்களுடைய ஆட்சியிலும் என்னைக் கைது செய்திருக்கிறீர்கள். ஆகவே, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று விளக்கமளித்தார்.