அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலசவச முட்டைகள் வெளிச்சந்தையில் மற்றும் மளிகை கடைகளில் விற்கப்படுவதாக பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு என நீல நிறத்தில் சீல் வைத்த முட்டைகள் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நீல நிற சீல் வைத்த முட்டைகள் மளிகைக் கடைகளில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் இந்த முட்டைகள் விற்கப்பட்டிருக்கிறது. அந்த கடைக்காரர் அருகில் உள்ள மொத்தக் கொள்முதல் நிலையத்தில் இந்த முட்டைகளை வாங்கியுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இது திட்டமிட்ட ஊழல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக எந்த புகாரும் வரவில்லை என்றாலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலம் மற்றும் ஊட்டச்சத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜ், அங்கன்வாடி மையங்களுக்குக் குழந்தைகள் வராதபோது மீதப்படும் முட்டைகளை அங்கன்வாடி உதவியாளர்கள் வெளிச் சந்தையில் விற்பார்கள் மற்றும் அங்கன்வாடிக்கு முட்டை எடுத்துச் செல்லும் விநியோகஸ்தர்கள் முட்டையின் கணக்கைக் குறைத்துக் காண்பித்து வெளிச் சந்தையில் விற்கிறார்கள். இதுபோன்று விற்கப்படும் முட்டைகளில் கெமிக்கலைக் கொண்டு சீலை அழித்துவிடுகிறார்கள். போன்ற இரண்டு வழிகளில் வெளிச்சந்தையில் அரசு முட்டை விற்கப்படலாம் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தியை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான முட்டைகள், வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எடப்பாடி – அதிமுக அரசுப் பள்ளி மாணவர்களின் வயிற்றில் அடித்துக்கூட ஊழல் செய்யத் துணிந்திருப்பது வேதனையானது என கூறியுள்ளார்.