மதுரை மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுரையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு,சித்திரைத்  திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு சித்திரை திருவிழழ வரும் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்குகிறது.
16-ம் தேதி அம்மன் திக் விஜயம், 17-ம் தேதி திருக்கல்யாணம், 18-ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகருக்கு எதிர் சேவை, 19-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் முழுவதும தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெறும்.
எனவே தேர்தலை மதுரை மாவட்டத்துக்கு மட்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் பாதுகாப்பு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டும். மதுரையைப் போல இந்தியா முழுவதும் தேர்தல் தேதியை மாற்றிவைக்கக் கோரினால் என்ன செய்ய முடியும். தேர்தல் நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகப்படுத்த முடியும். மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க முடியாது’என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எத்தனை உயரதிகாரிகள் விடுமுறை எடுத்து திருவிழாவுக்கு வருவார்கள் என்று தெரியுமா? மதுரை சித்திரைத் திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள்.
தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச் சாவடிகள் உள்ளன. களநிலவரம் தெரியாமல் எதுவும் பேசாதீர்கள். நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதுதான் இறுதியா? தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது? இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இதுதொடர்பாக, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.