ஈரோடு அருகே மனைவியின் தங்கை அதாவது மனைவியின் சித்தப்பா மகளை எஸ்ஐ ஒருவர் கடத்தி திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை செய்த எஸ்ஐ வெங்கடாசலபதியை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார் திவ்ய பாரதி என்பவர். இந்நிலையில் இவரை காணவில்லை என்பதால் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதியின் பெரியப்பாவின் மருமகன் வெங்கடாசலம் என்பவர் திவ்ய பாரதியின் தந்தையின் செல்போனுக்கு கால் செய்துள்ளார்.

அப்போது, தான் திவ்ய பாரதியை திருமணம் செய்து கொண்டதாகவும், காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். வெங்கடாசலபதி கோபிச் செட்டிபாளையம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளராக உள்ளார்.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் செல்போன் எண்ணை வைத்து, அவர் திண்டுக்கல் பகுதியில் இருப்பதாக கண்டறிந்தனர். காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையால் வெங்கடாசலம் தலைமறைவானார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த திவ்ய பாரதி, வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டனர். எஸ்ஐ வெங்கடாசலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.