நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்த பானி புயல் தமிழகத்தில் இருந்த ஈரப்பதத்தை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டதென சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி  புயல் ஒன்று உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஃபானி புயல் நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்து வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஃபானி புயலால் தமிழகத்தில் இன்னும் சில தினங்களுக்கு வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை மையத்தின் தலைமை இயக்குனர் பாலச்சந்திரன் ’ ஃபானி புயல் முற்றிலும் தமிழகத்தை விட்டு விலகிவிட்டது. புயல் நகர்வின் போது தமிழகத்தின் ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிட்டு சென்றுள்ளது. இதனால் வறண்ட காற்று வீசத் தொடங்கியுள்ளது. தரைக்காற்று வலுவாகியுள்ளது. ஆனால் அதைக் குளிர்விக்கும் கடல்காற்று இன்னும் உருவாகவில்லை. அதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்திற்கு மழைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை இப்படி வெயிலையும் ஏற்றுவிட்டு சென்றுவிட்டதே இந்த் ஃபானி புயல் என பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

பின்குறிப்பு : தமிழகத்தில் இன்னும் அக்னிநட்சத்திரம் தொடங்கவில்லை