இல்லாமல் ஆகி விட்ட மழை,  விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம்,போன்ற பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது.

இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை  விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அடிக்கடி சொந்த ஊர் செல்லும் தேவயானி குடும்பத்தினர் கிராமத்து வாழ்க்கையின் அவசியத்தையும் விவசாயத்தின் அவசியத்தையும் கருதி,  அருகே உள்ள மாத்தூர் என்ற கிராமத்தில் மனை நிலங்களாக மாற்றப்பட்ட நிலங்களை  வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட உன்னதமான செயலால் கிராமமக்களாலும் விவசாய விரும்பிகளாலும், இயற்கை ஆர்வலர்களாலும் தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.