திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதிமன்றம்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த எபிநேசன் என்பருக்கும் சங்கீதா என்பவருக்கும் திருமணம் ஆனது. இரண்டு மகள்கள் இவர்களுக்கு உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் சில வருடங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகளை சங்கீதாவும், இளைய மகளை எபிநேசனும் வளர்த்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் எபிநேசனுடன் வசித்து வந்த இளைய மகளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 13 வயதே ஆன அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது உடனடியாக அரசாங்கத்தின் கவனத்துக்கு போனது. இதனையடுத்து சிறுமிக்கு பிறந்த குழந்தை சேலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமி கூறிய தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. சிறுமியின் தந்தையான எபிநேசனை தான் பெற்ற 13 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் எபிநேசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் எபிநேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.