நாட்டில் முதன் முறையாக இந்துத்துவா நீதிமன்றத்தை மீரட்டில் இந்து மகாசபையினர் அமைத்துள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்நியாசினியை நியமித்துள்ளனர். இந்த நீதிமன்றம் இந்து தர்மத்தையும் பெருமையையும் சீர்குலைப்பவர்களை தண்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் ஷரியத் நீதிமன்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த இந்துத்துவா நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்து மகாசபையின் தேசிய துணைத்தலைவர் அசோக் சர்மா ஷரியத் நீதிமன்றங்களை தடை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அரசு அதனை நிறைவேற்றாததால் தற்போது இந்துத்துவா நீதிமன்றத்தை ஆரம்பித்துள்ளனர்.

பஞ்சாயத்து பாணியில் இயங்க உள்ள இந்த நீதிமன்றம், இந்து மதத்தின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் பாதிக்கப்பட்டால், அவற்றை வழக்காக தானே முன்வந்து எடுத்துக் கொள்ளும். இந்த குற்றங்களை செய்வது பிரதமராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் அவர்களுக்கு சம்மன் அனுப்புவோம். தண்டனைகளில் மரண தண்டனையும் அடங்கும். எங்களது தன்னார்வத்தொண்டர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்துவார்கள் என இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 36 வயதான சந்நியாசினி பூஜா சகுன் பாண்டே தெரிவித்துள்ளார்.