திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் 30-ஆம் நாள் மறைவையொட்டி மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இருந்து மெரினா அண்ணா சதுக்கம் வரை அமைதியாக பேரணியாக சென்று கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்ற இந்த பேரணிக்கு கூடியிருந்த கூட்டம் ஸ்டாலின் தரப்பை உஷார் ஆக்கியுள்ளது. இருப்பினும் அழகிரிக்கு கட்சியில் இருந்தோ, கருணாநிதியின் குடும்பத்தில் இருந்தோ இதுவரை யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. எப்படியாவது மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் அழகிரி.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கருணாநிதி குடும்பத்தில் இருந்து மு.க.அழகிரிக்கு முதல் ஆதரவு குரல் எழுந்துள்ளது. கருணாநிதியின் மூத்த மகனும், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மூத்த அண்ணனுமான மு.க.முத்து அழகிரிக்கு வாழ்த்துக்கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள் மு.க.முத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தில் இருந்து அழகிரிக்கு வாழ்த்து கடிதம் முதன் முதலாக வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இனிமேல் காட்சிகள் மாறலாம் எனவும், அழகிரிக்கு சாதகமான சூழல் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...