பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் இன்று காலாமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சர்க்கரை நோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து உடல் மிகவும் நலிவுற்றது. இதனைத்தொடர்ந்து பக்கவாதம் ஏற்பட சரியாக பேச முடியாமல் இருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.

இதனையடுத்து 93 வயதான வாஜ்பாய் கடந்த ஜூன் 13-ஆம் தேதி சிறுநீரக தொற்று காரணமாக டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக அவருக்கு ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டிருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை எயிம்ஸ் மருத்துவமனை வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 05.05 மணியளவில் காலமானதாக எயிம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 93.